மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை மருத்துவக் கல்லூரி மதுரையில் 1954 ல் தமிழக அரசால் அரசு இராசாசி மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை இருபது மில்லியன் மக்கள்தொகையுள்ள தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு மூன்றாம் நிலை சிகிச்சை வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது. இந்த மருத்துவக்கல்லூரி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஏற்பு பெற்றுள்ளது. இக்கல்லூரி ஆகஸ்ட் 2, 1954 இல் அப்போதைய முதல்வர் காமராசர் மற்றும் மைய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ராசகுமாரி அம்ரத் கவுர் அவர்களால் துவங்கப்பட்டது. கே.பி. சாரதி முதல் சிறப்பு அதிகாரியாகவும் மற்றும் சாரா ஜே சவுரி முதல் முதல்வராகவும் இருந்தனர். நிரந்தர அங்கிகாரம் 1954 லும், இந்திய மருத்துவக் கழகத்தின் அங்கிகாரம் 1961 லும் பெற்றது. தற்போதைய கட்டிடம் 1958 இல் கட்டப்பட்டது. இக்கல்லூரி 1979 இல் வெள்ளி விழாவும், 2004 பொன் விழாவும் கண்டது. இது முதலில் சென்னைப் பல்கலைக் கழகத்துடனும், பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதிலிருந்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.


